செங்குருதி ஞாயிறு


 முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 
3.ஜிம்மி லீ ஜாக்சன் 
4. ஜான் லூயிஸ் 

 எட்மன்ட் பெட்டஸ் பாலத்தின் மேற்பகுதியை அடைந்த ஜான் லூயிசும் வில்லியம்சும் திடிரென்று நின்றனர். அங்கே பாலமிறங்கும் இடத்தில் நீலவானம் இறங்கி வந்திருக்கிறதோ என்று ஐயுறும் வகையில் ஒரு தோற்றம்! ஆம்! நீலத்  தலைக்கவசமும் நீலச் சீருடையும் அணிந்த அலபாமா மாநிலப் படையினர் நெடுஞ்சாலை 80இன் ஒரு புறமிருந்து மறுபுறம்வரைத் திரண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நிறவெறிபிடித்த வெள்ளைப் பொதுமக்களும் எள்ளி நகையாடிக் கான்பெடரேட் (Confederate) கொடிகளை அசைத்துக்கொண்டு! செல்மாவின் செரிப் ஜிம் கிளார்க் நியமனம் செய்திருந்த வெள்ளைப் பிரதிநிதிகளும் தடிகளோடும் சாட்டைகளோடும் குழுமியிருந்தனர். முட்கம்பிகள் பொருத்தப்பட்ட ரப்பர் பைப்பைச் சுழற்றிக்காட்டியதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.  


              அஞ்சியோடினால் விடுதலை கிடைக்குமா? சம உரிமை கிடைக்குமா? இணைந்து வந்திருந்த ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் மனதில் வீரம் பெருகியிருந்தது, ஆனால் அது காந்தியின் மூலம் கிங் ஜூனியர் மூலம் மக்கள் மனங்களில் பற்றி வைக்கப்பட்ட அகிம்சை வழியிலான வீரம்.!  சுயமரியாதையின் வீரம்!

ஓசியா வில்லியம்ஸ் மற்றும் ஜான் லூயிஸ் தலைமையில் ஊர்வலம்
         வரப்போகும் விபரீதத்தை உணர்ந்த ஓசியா வில்லியம்ஸ் பாலத்தின் கீழ் கரைபுரண்டோடிக்கொண்டிருந்த ஆற்றைப் பார்த்தவாறே லூயிசிடம் கேட்டார், "உங்களுக்கு நீச்சல் தெரியுமா?" என்று. இல்லை என்று சொன்ன லூயிஸ் முன்னேறத் துவங்கினார். காலடியோசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த அணிவகுப்பில் அப்பொழுது  முன்னிருந்தக் குதிரைகளின் கனைப்பொலிகளும் சேர்ந்துகொண்டதாக லூயிஸின் நினைவுக் குறிப்புகளிலிருந்து அறியலாம்.


மேஜர் ஜான் கிளௌட்
          மேஜர் ஜான் கிளௌட் (Major John Cloud) அந்த ஊர்வலம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் களைந்து போகும்படியும் ஆணையிட்டார். மேஜருடன் பேசலாமா என்று லூயிஸ் கேட்டதற்குப் பேசுவதற்கு ஒன்றும் இல்லையென்றும் கலைந்துபோக இரண்டு நிமிடங்கள் கொடுப்பதாகவும் கிளௌட் கூறினார். இதற்குமேல் முன்னேறுவது அடாவடித்தனமாக இருக்கும் என்று உணர்ந்த லூயிஸ் ஓசியாவிடம் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்வோம் என்றார். பின்னால் இருந்தவர்களுக்குச் சொல்லப்பட்டு அனைவரும் பாலத்தின்மேல் முழங்காலிட்டனர். இருநிமிடங்கள் அவகாசம் கொடுத்திருந்த கிளௌடிற்குஅறுபது,எழுபது நொடிகளுக்குமேல் பொறுமை இருந்திருக்கவில்லை. முன்னேறிச் செல்லுமாறுப் படையினருக்கு உத்தரவிட்டார்.



         படையினரின் பூட்ஸ் ஒலிகளும் குதிரைக் குளம்பொளிகளும் குழுமியிருந்த வெள்ளையினரின் நிறவெறிக் கூச்சல்களும் காற்றில் நிறைந்தன. லூயிஸின் நினைவிலிருந்து, "முன்னணியில் வந்த படைவீரன் வார்த்தையேதும் இன்றி என் தலையின் இடதுபக்கத்தில் தன் தடியால் அடித்தான். கால்கள் செயலிழந்து சுருண்டேன். அடுத்த அடியும் விழுந்தது. அனைத்தும் சுழன்றதுபோல் உணர்ந்தேன், வலியேதும் உணரவில்லை. துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டது. எங்களைச் சுற்றிலும் ஒரே புகை மூட்டம். கண்ணீர் புகைக் குண்டுகளினால் ஏற்பட்டப் புகைமூட்டம்! அதற்குமுன் எனக்கு அந்த அனுபவம் இருந்ததில்லை. குமட்டல் வரவைக்கும் C-4 என்ற நச்சுப் புகை என்று பின்னர் அறிந்துகொண்டேன். அன்று என்னால் மூச்சுவிடவே முடியவில்லை. இருமலுடன் மூச்சுத்திணறலும் சேர்ந்து இறுதி மூச்செடுக்கிறேன் என்றே தோன்றியது. என் வாழ்வில் பெரும்பீதி கொள்ள வேண்டிய ஒன்று உண்டு நேரம் என்றால் அது அப்போதைய நேரமாகத் தானிருக்கும், ஆனால் நான் அச்சமடையவில்லை! அசாதரணமான அமைதியை உணர்ந்தேன். மக்கள் உயிரிழக்கிறார்கள், நானும் இப்பொழுது உயிரிழக்கிறேன் என்றே தோன்றியது.." எப்பேர்ப்பட்ட வீரர் ஜான் லூயிஸ்! 

ஜான் லூயிஸ் தாக்கப்படுதல் Img:thanks Google

Image: thanks Google

கண்ணெரிச்சலாலும் மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்ட மக்கள்

         அடிபட்ட மக்கள் செல்மாவிலிருந்த குட் சமாரிடன் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். மற்றவர்கள் மூச்சுத் திணரலோடும் காயங்களுடனும் பிரவுன் சேப்பல் (Brown Chapel) அல்லது பர்ஸ்ட் பேப்டிஸ்ட் (First Baptist) சர்ச்சிற்கு ஓடினர். வழியில் தேங்கியிருந்தக் குட்டைகளில் இருந்து நீரெடுத்துக் கண்களைக் கழுவிக் கொண்டே ஓடினர். படைவீரர்கள் பிரவுன் சேப்பல் தாண்டியும் விரட்டிச் சென்றனர்.
Selma movement leader Mrs.Amelia Boynton gassed and clubbed

         வியப்புக்குரிய விசயம் என்னவென்றால் கண்மண் தெரியாமல் தாக்கப்பட்டுக் குருதி வழிந்தாலும் மக்கள் வீடுகளுக்குச் செல்லாமல் பிரவுன் சேப்பலில் அழுதுகொண்டே கூடினர்.  லூயிஸின் மண்டை ஓடு உடைந்திருந்தது. எனினும் மருத்துவமனை செல்ல மறுத்த அவர் பிரவுன் சேப்பலுக்குச் சென்றார். திரண்டிருந்த மக்களைப் பார்த்து உரையாற்றினார். "அதிபர் ஜான்சன் வியட்நாமிற்கு எப்படிப் படை அனுப்புகிறார் என்று எனக்குத் தெரியாது. காங்கோவிற்கு எப்படிப் படை அனுப்புகிறார் என்று தெரியாது. ஆப்பிரிக்காவிற்கு எப்படிப் படை அனுப்புகிறார் என்று தெரியாது. ஆனால் அவரால் செல்மா, அலபாமாவிற்கு மட்டும் படை அனுப்ப முடியாது" என்றார். திரண்டிருந்த மக்களும் உற்சாகக் குரல் எழுப்பினார்கள். லூயிஸ் தொடர்ந்தார், "அடுத்த முறை நாம் அணிவகுத்துச் செல்லும்போது மான்ட்கொமெரி தாண்டியும் செல்லவேண்டும். வாஷிங்டன் வரை செல்வோம்" என்றார்! 
         மான்ட்கொமெரிஅலபாமா மாநிலத் தலைநகர், வாஷிங்டன் அமெரிக்கத் தலைநகர்! மாநில அரசல்ல, பெடரல் அரசின் கவனம் தேவை என்று முடிவெடுத்த நாள்! போராட்டம் இன்னும் வீறு கொண்டது!! உச்சி மீது வானிடிந்து விழ்ந்தது போன்றுதான் இருந்தது...ஆனாலும் அச்சமில்லை என்றே உறுதி கொண்ட மக்கள்! இப்படிப்பட்ட வேதனைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் பின்பே விடுதலை கிடைக்கிறது, காலப்போக்கில் மறந்திடாமல் தலைமுறைத்  தலைமுறையாய் அதனைப் பதித்துப்  போற்றுவதில் இருக்கிறது விடுதலையின் அர்த்தம்!
          அன்று இரவு கிழக்கமெரிக்க நேரம் ஒன்பது மணியளவில் ஏபிசி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த 'ஜட்ஜ்மென்ட் அட் நுரேம்பெர்க்' என்ற படம் தடைபட்டு சிறப்புச் செய்திகள் ஓடியது. நெடுஞ்சாலை 80இல் நடந்த கொடுமை (long film report of the assault on Highway 80) என்ற செய்திச் சுருள் ஒளிபரப்பப்பட்டது. அன்றிரவு நாற்பத்தெட்டு மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்துக் கொண்டிருந்த சேனலின் செய்திச் சுருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அமைதியாக ஊர்வலம் சென்ற மக்கள் கொடூரமாகக்  கண்ணீர்ப் புகை குண்டுகளாலும் தடிகளாலும் தாக்கப்பட்டதைக் கண்டு அமெரிக்கா அதிர்ந்தது.
         1930இன் தண்டி யாத்திரைக்குப் பிறகு மிக முக்கிய அகிம்சைப் போராட்டமாகச்  செங்குருதி ஞாயிறு (Bloody Sunday), மார்ச் 7, 1965 மாறியது என்கிறார் நூலாசிரியர் டேவிட் ரெம்னிக்.1 அமெரிக்கவரலாற்றில் செங்குருதி ஞாயிறுமுக்கியத்துவம் பெற்றது. குடியுரிமைப் போராட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

தொடரும்.... 
        
2015இல்அனுசரிக்கப்பட்ட ஐம்பதாவது வருட நினைவு


உசாத்துணை:
1.The Bridge-Life and Rise of Obama by David Remnick
படங்கள் கூகிள் தேடல் மற்றும் Veterans of the Civil Rights Movement.

சில இணைப்புகள்:
1. காங்கிரஸ்மேன் ஜான் லூயிஸ் உடன் ஒரு நேர்காணல்
2. கொடுரமான சிவப்பு ஞாயிறு காணொளி a. Bloody Sunday  
     b.Bloody Sunday



10 கருத்துகள்:

  1. முந்தைய பதிவுகளை படிக்க இயலவில்லை!இன்னும் கண் கோளாறு சரியாகவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா, கண் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள், பிறகு படித்துக் கொள்ளலாம். அதனோடே வந்து வாசித்துக் கருத்திட்டதற்கு மனமார்ந்த நன்றி ஐயா.

      நீக்கு
  2. வேதனை சரித்திரம். தொடர்கிறேன். கணினி சரியாகும்போதுதான் தம வாக்களிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. ஜான் லூயிஸ் மாபெரும் வீரர்!!! தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொண்டோம். அருமையான தொடர் சகோ...தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  4. விளக்கி செல்லும் நடை அருமை சகோ தொடர்கிறேன்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...