தூரம் தந்த துணிவு

இரலை மான்களின் கொம்புகள் போல
மரங்களின் இலைகளற்ற கிளைகள் பின்னியிருக்க
மண்ணோடு கலந்த மழை நீர்
பழுப்புக் கரைசலாய்  சல சல என்று ஓட
பள்ளத்தாக்கின் மேலே ஒருபுறம் 
அமைக்கப்பட்ட வேலியில் சாய்ந்து 
அமைதியான இந்தக் காட்சியையும்
சலசலக்கும் இசையையும்
உள்வாங்கி ஒன்றித்துப் போன நான்
சர சர என்று
திடீரென்று அமைதியைச் சிதைத்த
ஓசையின் திசை திரும்பினேன் 
உவலை கீழே நெளிந்து சென்ற
பாம்பு பார்த்தும் பதைக்கவில்லை
ஆச்சரியம் ஒன்றும் இல்லை
தூரம் தந்த துணிவு , அவ்வளவே!

 உவலை - காய்ந்த இலைகள் 


13 கருத்துகள்:

  1. அருமை சகோதரி.எதையும் தொலைவிலிருந்து கவனித்து வந்தால் அச்சம் ஏற்படாது என்பது உண்மையே.தொலைவு துணிவைத் தரும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அட! கவிதை எங்கெல்லாம் ஒளிந்து இருக்கு பாருங்க. கண்ணில் விழும் ஒரு எளிய காட்சியை கூட கவிதை வடிவில் பதிவு செய்யும் திறன் வியக்க வைக்கிறது கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  3. தூர‌ம் துணிவு த‌ந்தாலும், ச‌ற்று க‌வ‌ன‌ம் கிரேஸ்.. பாம்பைப் பார்த்தால் ப‌டையும் ந‌டுக்குமே.. ப‌டிக்கும் பொழுதே ப‌ய‌மா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. அழகிய இயற்கையில்
    அளவிடமுடியா வனப்பினில்
    அமிழ்ந்துபோயுள்ள உங்கள்
    அழகான கவிகண்டே
    ஆச்சரியத்தில் என்மனம் இன்னும்...

    வாழ்த்துக்கள் கிரேஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இளமதி! கவிதையில் கருத்துரைக்கும் விதம் அருமை!

      நீக்கு
  5. அட...! அருமை...

    வலைச்சர ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. நல்ல கவிதை. ‘உவலை’ என்ற சொல்லை நான் கேள்விப்பட்டதில்லை. எந்த ஊர் அல்லது நாட்டு வழக்கு அது? – கவிஞர் இராய.செல்லப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கவிஞர் இராய.செல்லப்பா அவர்களே!
      'உவலை' என்னும் காய்ந்த இலைகளைக் குறிப்பிடும் சொல் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐங்குறுநூற்றில் "அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
      தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
      உவலை கூவல் கீழ
      மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே." என்ற பாடல் ஒரு உதாரணம்.

      நீக்கு

  7. // இரலை மான்களின் கொம்புகள் போல
    மரங்களின் இலைகளற்ற கிளைகள் பின்னியிருக்க
    மண்ணோடு கலந்த மழை நீர்
    பழுப்புக் கரைசலாய் சல சல என்று ஓட ...//

    இலையுதிர் காலத்தில் தான் மரங்கள் இலைகளற்று வெற்றுக்கிளைகள் வெறிச்சென இருக்கும் காட்சி காண இயலும்.
    கொடும் வெயிலிலும் கோடை மழை பெய்யும் ஆதலால், வசந்த காலம் வந்த பின் வெற்றுக்கிளைகள் இருப்பதில்லை.

    ஆயினும் இலைகளற்ற கிளைகள் மான்களின் கொம்புகள் போல பின்னியிருக்க...

    ரசித்தேன்.

    இலைகளற்ற மரக்கிளைகள் காணும்போது

    மண்ணோடு கலந்த மழை நீர் பழுப்புக் கரைசலாய் சல சல என்று ஓட...

    காட்சியும் கண்டீரா !!
    குறிஞ்சி நிலத்தில் இப்படி ஒரு காட்சியா !!

    கனவா ! நினைவா !!

    காலத்தால் வேறுபடும் காட்சிகளை
    கவிதையில் ஒன்றுபட, ஒருமித்துக் காட்டுவதும்
    ஒரு அணி .

    அழகு.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுப்பு தாத்தா அவர்களே!
      நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் நான் கண்டதை அப்படியே எழுதியிருக்கிறேன். இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்த்த மரங்கள் வசந்தத்தில் தானே துளிர்க்கும்? இங்கு இன்னும் வசந்தம் வரவில்லை.. மேலும் நான் இருப்பது முல்லை நிலம் என்று நினைக்கிறேன்...
      //காலத்தால் வேறுபடும் காட்சிகளை
      கவிதையில் ஒன்றுபட, ஒருமித்துக் காட்டுவதும்
      ஒரு அணி .// -அருமை..நன்றி!

      கவிதையை ஆய்ந்து கருத்து உரைத்தமைக்கு மிக்க நன்றி! மகிழ்ச்சி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...