முல்லைப்பாட்டு முன்வைக்கும் மன்னன் மனம்

பகலில் போர் முடிந்து இரவில் பாசறையில் இருக்கும் மன்னன் உறக்கம் வராமல் எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறான். அவன் என்ன நினைத்தான் என்று முல்லைப்பாட்டு ஆசிரியர் அழகாகச் சொல்லியிருக்கும் பாடல் இது. போரில் வென்ற செல்வம் பற்றியோ,தன் வீரம் பற்றியோ, தன் பெருமை பற்றியோ, மனைவி பற்றியோ அவன் சிந்திக்கவில்லை..மாறாக தனக்காகப் போரிட்டு புண்பட்ட யானை, குதிரை, தனக்காகப் போரிட்டு உயிர்நீத்த வீரர்கள் பற்றி எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தான் மன்னன். அந்தச் சூழலை அழகாக உவமைப் படுத்தியிருக்கும் பாடல் இதோ:

"எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து
பிடிக்கணம் மறந்த வேழம்; வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல்துமிபு
பைந்நுனைப் பகழி மூழ்கலின் செவிசாய்த்து
உண்ணாது உயங்கும் மாசிந் தித்தும்.
ஒருகை பள்ளி ஒற்றி, ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து
"

எடுத்து எறிகின்ற வேல் பாய்ந்ததால் புண்பட்டு பெண் யானையை மறந்திருக்கும் யானையையும் , யானையின் பருத்த தும்பிக்கை அறுபட்டு பாம்பு துடிப்பது போல துடித்ததையும், தேன் பொங்கிவழிகின்ற மலர் மாலை அணிந்து வெற்றிபெற்று செஞ்சோற்று கடனுக்காக உயிர்விட்ட வீரர்களையும் பற்றி நினைக்கிறான். மேலும் தோலாலான கவசம் அணிந்திருந்தும் கூர்மையான அம்பு பாய்ந்ததால் செவியை சாய்த்து உண்ணாது வருந்தும் குதிரைப் பற்றியும் நினைத்து, ஒரு கையைப்  படுக்கையில் சாய்த்தும் ஒரு கையில் தலையைச் சாய்த்தும் நெடு நேரம் நினைத்துக் கொண்டிருந்தான். இவ்வாறாக மன்னனின் நினைவுகளைச் சொல்கிறது இப்பாடல்.

பாம்பு துடிப்பது போல யானையின் தும்பிக்கை துடித்ததாகச் சொல்லியிருக்கும் உவமையும் கடிவாளத்தைத் தாண்டி அம்பு துளைத்ததால் வலியில் செவி சாய்த்து புல் உண்ணாது வருந்தும் குதிரையும் மாலையிட்டு போரிட்டு வெற்றி பெற்ற வீரர்களும் போர்க் காட்சியைக் கண் முன் கொண்டுவருகின்றனர். இதைப் பற்றியெல்லாம் நினைக்கும் மன்னனின் மனம் மனதைக் கவர்கின்றது. வீரமும் தன்னைச் சார்ந்த உயிர்களின் மேல் அன்பும் கொண்ட மன்னன் மனம்!

மேலும் வேலுக்கு 'எடுத்து எறிகின்ற எஃகம்' என்ற பெயரைத் தெரியப்படுத்திய பாடல்.

1 கருத்து:

  1. நம் மன்னர்களின் மறுபக்கத்தை காட்டுவதாக அமைந்து உள்ளது இந்த அழகான பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி கிரேஸ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...